நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு பதிலாக வைக்கோலால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் பலத்த பாதிப்பை சந்தித்தன.பாறைகள், மண், சேறு மற்றும் சகதியுடன் ஆக்ரோஷமாக பாய்ந்த வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் சிக்கினர். உயிரைக் காப்பாற்ற பலர் ஓடியபோதிலும், வெள்ளத்தின் வேகம் அவர்களை அடித்துச் சென்றது.இந்த பேரிடரில் இதுவரை 1,127 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
சுமார் 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ளம் ஏற்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்டதால், காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த சூழலில், காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில் இன்று உயிரிழந்தவர்களுக்கான இறுதிச்சடங்கு நடைபெற்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்படாததால், அவர்களுக்கு பதிலாக வைக்கோலால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் பயன்படுத்தப்பட்டன.உருவ பொம்மைகளை பாடைகளில் கட்டி, குடும்பத்தினர் தூக்கிச் சென்று இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். உடல்கள் கிடைக்காத துயரத்திலும், தங்கள் உறவினர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய இந்த காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.