நெல்லை டவுனில் ஏற்பட்ட தகராறில் கல்லால் சரமாரியாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த 25 வயது வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது சலீமின் மகன் அப்துல் அஜீஸ் (25). இவர் கடந்த மாதம் 31-ம் தேதி நெல்லை டவுன் கூலக்கடை பஜாரில் உள்ள ஓட்டலில் உணவருந்திவிட்டு, அருகேயிருந்த கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஓட்டலுக்கு சாப்பிட வந்த மூன்று பேருக்கும் அப்துல் அஜீஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த மூவரும் அப்துல் அஜீஸை தாக்கி கீழே தள்ளியதுடன், கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
Advertisement
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அப்துல் அஜீஸை தாக்கியவர்கள் மகிழ்வண்ணபுரத்தைச் சேர்ந்த நாராயணன் பிரகாஷ் (23), வையாபுரி நகரைச் சேர்ந்த மகாராஜன் (26), காவல்பிறை தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அப்துல் அஜீஸ் நேற்று மாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.