Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் அபாயங்களைப் பொறுத்து, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழையால் ஏற்படக்கூடிய நிலச்சரிவு, மண் சரிவு, மலைச்சரிவுகளில் நிலையற்ற தன்மை மற்றும் சாலைகளில் மண், பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மலைச்சரிவுகள், சாலை வெட்டுப் பகுதிகள் மற்றும் ஏற்கனவே அபாயம் கண்டறியப்பட்ட இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கனமழைக்கு முன்பாகவும், மழை பெய்யும் நேரங்களிலும் அபாயம் உள்ள மலைச்சரிவுகள் மற்றும் சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். மண் விரிசல், சரிவு, நீர்க்கசிவு உள்ளிட்ட நிலையற்ற தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட அபாயப் பகுதிகளில் கொடைக்கானலில் மேற்கொள்ளப்பட்டுள்ள Soil Nailing போன்ற சரிவு உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, நிலச்சரிவு தடுப்பு மற்றும் மலைச்சரிவு உறுதிப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மலைப்பகுதிகளுக்கான முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நிலச்சரிவு அல்லது மண், பாறைகள், கழிவுகள் சரிந்து சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்றுவதற்கான இயந்திரங்கள், பணியாளர்கள் மற்றும் தேவையான உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அபாயம் உள்ள மலைப்பகுதிகளில் மீட்பு மற்றும் வெளியேற்றப் பணிகளுக்கான பணியாளர்கள், உபகரணங்களை முன்கூட்டியே நிலைநிறுத்துவதுடன், முதல்நிலை மீட்புப் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். அபாயப் பகுதிகளுக்கு அருகிலுள்ள நிவாரண முகாம்களை ஆய்வு செய்து, அவை உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படக்கூடிய சூழல் இருப்பதால், VHF கருவிகள் மற்றும் Satellite Phones செயல்படும் நிலையில் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். முக்கியமான அபாயப் பகுதிகளில் Mock Drill மற்றும் வெளியேற்றப் பயிற்சிகளை நடத்தி, அவசர நேரத்தில் மீட்பு, மக்கள் வெளியேற்றம் மற்றும் சாலைத் தொடர்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். மாவட்ட அளவிலான பருவமழை முன்னறிவிப்பை மட்டுமே நம்பாமல், உள்ளூர் பகுதிகளில் பதிவாகும் கனமழை மற்றும் குறுகிய நேரத்தில் பெய்யும் தீவிர மழையையும் கருத்தில் கொண்டு உடனடி கள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement
மலைப்பகுதிகளுக்கான பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தனித்துவமான செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலச்சரிவுக்கு முன்பாக அதன் அறிகுறிகளை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாலைத் தொடர்பை பாதுகாத்தல், தேவைப்படும் இடங்களில் மக்களை வெளியேற்றுதல் மற்றும் விரைவான மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். தென் மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தென் மாவட்டங்களில் கால்வாய்கள், நீர்வழிகள், கண்மாய்கள், உபரி நீர்வழிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அபாயப் பகுதிக்கும் பொறுப்பான அலுவலர், தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் அவசரகால செயல்திட்டம் ஆகியவை மழை தீவிரமடைவதற்கு முன்பே தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மழையால் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். மழைக்காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட முகாம்களில் பாதுகாப்பாக சேமித்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். டெங்கு தடுப்பு பணிகளில் தீவிர கவனம் மாவட்ட வாரியாக டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நோய் அதிகரித்து வரும் பகுதிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்டறிய வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். DBC பணியாளர்கள் மூலம் வீடுதோறும் கள ஆய்வு நடத்தி, Aedes கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையுடன் இணைந்து பிற துறைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், டெங்குவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், திரவ சிகிச்சை வழங்குதல், தீவிர டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி மூலம் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு