நாங்கள் தினமும் டென்ஷனாக இருக்கிறோம்... சட்டசபையில் அமைச்சர் ஆனந்த்
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்தவர்களுக்கான இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “நீங்கள் அனைவரும் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் அனைவரும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “சின்ன வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும், இன்று காலையில்கூட முதல்-அமைச்சர் போன் செய்து பிரச்சினை சரியாகிவிட்டதா என்று கேட்கிறார்.
நீங்களாவது 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தீர்கள். நாங்கள் தினமும் டென்ஷனாக இருக்கிறோம். சிறிய விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அந்த அளவுக்கு பயம் இருக்கிறது” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எப்போதும் பிசி ஆனந்தாகவே இருக்கிறார். அனைத்து கட்சித் தொண்டர்களும் அவரை சந்தித்து வருகின்றனர். இது புதிதாக தொடங்கப்பட்ட இயக்கம். இனிமேல்தான் உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவரும். பேசுவது எளிது; ஆனால் அதை நடைமுறைப்படுத்தும்போதுதான் சிரமங்கள் புரியும்” என்று தெரிவித்தார்.இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்தப் பேச்சால் சட்டசபையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.