எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை எதிர்கொள்ள தமிழக வெற்றி கழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சந்தை வளாகம் மற்றும் புதிய சமுதாயக் கூடத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை. இருப்பினும், அத்தகைய தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதைச் சந்திக்க அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. பேரூராட்சிகளின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் வரை உள்ளது. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். எந்தவொரு அரசியல் இயக்கமும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிப்பது வழக்கம்.
Advertisement
இதன் அடிப்படையில்தான் முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து எந்தக் கடிதங்களும் பெறப்படவில்லை. தீபாவளி தினத்தன்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் தனிநபர்களுக்கு இடையிலான முன்விரோதம் மற்றும் மனக்கசப்புகளால் நிகழ்ந்தவை. இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடும் முக்கியமான பண்டிகை தீபாவளி. அன்றைய தினம் ஓரிரு இடங்களில் மட்டுமே இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் இனி ஏற்படாமல் இருக்க மக்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன், பொறாமை உணர்வுகளையும் தவிர்க்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடர்பான விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. முதலமைச்சரிடம் உரிய விளக்கத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.