தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கருக்கும், அவரது நீண்டகால காதலரான ராஜவேல் ராஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக வெளியான சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாஃபியா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘பத்து தல’, ‘டிமான்டி காலனி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றன. இதற்கிடையே, அவர் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பிரியா பவானி சங்கரும் ராஜவேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இவர்கள், தங்களது உறவு குறித்த தகவல்களையும் பொதுவெளியில் வெளிப்படையாகப் பகிர்ந்து வந்துள்ளனர்.
Advertisement
திரைத்துறையில் இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்தாலும், காதல் உறவையும் தொடர்ந்து பேணி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ரகசியமாகத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக, பிரியா பவானி சங்கரும் ராஜவேலும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்களில் பிரியா பவானி சங்கரின் முகத்தில் மஞ்சள் பூசப்பட்டிருப்பதுடன், அவரது கைகளில் மருதாணியும் காணப்படுகிறது. மேலும், இருவரும் மாலை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், திருமண நிச்சயதார்த்தம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரியா பவானி சங்கர் அல்லது ராஜவேல் இதுவரை வெளியிடவில்லை.