தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் - தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டை ஆசியாவின் முன்னணி முதலீட்டு மையமாக உருவாக்குவதை இலக்காகக் கொண்டு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ மூலம், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சுமார் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளன. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் சுமார் 5,690 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் நம்பிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த 15.07.2026 முதல் நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), இந்த முதலீட்டு முயற்சிகளுக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையில் இருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம், CETA-வை ஆரம்பத்திலேயே செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு ஏற்கனவே வலுவான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. CETA மூலம் இத்துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணி, வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகள் பிரிட்டன் சந்தையில் உருவாகி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளன. மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் கூட்டு நிறுவனங்களுக்கான பங்குதாரர்களை உருவாக்குதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பல நிறுவனங்கள் நீண்டகாலமாக தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன.