இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கிய தகவலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021-ம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் கவனம் பெற்றன. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
Advertisement
‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ப்ரீக்வெல் திரைப்படமாக உருவாகிறது. 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தின் குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அக்கால சென்னை வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட காட்சிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் தொடங்கியுள்ளது. இதனை ஆர்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.