தீபாவளி பண்டிகை: மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இன்று முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இன்று முதல் 8-ம் தேதி வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்குத் தடை இதன்படி, பகல் நேரங்களில் மதுரை நகரின் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பைபாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடி சாலை, கே.கே. நகர் 80 அடி சாலை, அழகர்கோவில் சாலையில் உள்ள மூன்றுமாவடி சந்திப்பு, புதுநத்தம் சாலை அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் சாலை கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்பு ஆகிய வழித்தடங்களில் இருந்து லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய அனுமதி கிடையாது. பயணிகள் வாகனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. இந்தச் சந்திப்புகள் வழியாக வணிக வாகனங்கள் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும். அதேநேரத்தில், 6 மற்றும் 7-ம் தேதிகளில் பகல், இரவு என 24 மணி நேரமும் லாரிகள், கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் வாகனக் கட்டுப்பாடு பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 6 மற்றும் 7-ம் தேதிகளில் நேதாஜி சாலை, மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, மேல ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பேலஸ் ரோடு மற்றும் கீழமாரட் வீதிகளில் வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதசாரிகள் அதிகம் பயன்படுத்தும் தெற்கு மாசி வீதி, நேதாஜி ரோடு, மேல கோபுரத் தெரு, கீழமாரட் வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 8-ம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வாகனங்களை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அடுக்குமாடி கட்டண வாகன நிறுத்தம் அல்லது வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை நகருக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.