தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். பட்டாசு கடைகளைத் திறக்க தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டும். இதில், முதலில் தீயணைப்புத் துறையின் அனுமதியைப் பெற்ற பிறகே மற்ற துறைகளிடம் சான்றிதழ் பெற முடியும்.
Advertisement
அந்த வகையில், நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கோரி தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறைக்கு இதுவரை 12,098 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 10,244 விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 940 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 914 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.