தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும், மதுப்பழக்கத்தை முற்றிலுமாகத் தவிர்த்து உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மழை பெய்யாத பட்சத்தில் இன்றைய மாலையே பட்டாசு சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிடும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புறங்களிலும் வசதி படைத்தவர்கள் மத்தியிலும் அதிகம் கொண்டாடப்பட்ட தீபாவளி, தற்போது கிராமங்கள் வரை பரவி அனைத்து மக்களும் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது. தீபாவளி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். சில இடங்களில் மத வேறுபாடுகளைக் கடந்து, இந்தியர்கள் என்ற அடையாளத்துடன் பிற மதத்தினரும் இப்பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய காலங்களில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே பல குடும்பங்கள் கடன் வாங்கி குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து பண்டிகையைக் கொண்டாடிய நிலை இருந்தது. ஆனால், தற்போது பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் பரிமாறுவது, புத்தாடைகள் அணிவது ஆகியவற்றைக் கடந்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் வாய்ப்பாகவும் தீபாவளி மாறியுள்ளது. வேலை நிமித்தமாக எங்கு இருந்தாலும் பண்டிகைக்காக சொந்த ஊருக்கும் வீட்டிற்கும் திரும்பி வந்து குடும்பத்தினர், உறவினர்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒன்றாக இருப்பது நல்ல மாற்றமாகும்.
Advertisement
அதேநேரத்தில், மற்றவர்கள் அதிக விலைக்கு பட்டாசுகள் வாங்குகிறார்கள் என்பதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு கடன் வாங்கி அதிகமாகச் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிப்பது மட்டுமே தீபாவளியின் நோக்கமல்ல. வாழ்க்கையில் இருள் விலகி ஒளி பிறக்க வேண்டும் என்பதையே தீப ஒளித் திருநாள் உணர்த்துகிறது. தீபாவளி மாலை 6 மணியளவில் குடும்பத்தினருடன் இணைந்து மண் அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்வதே சிறந்த கொண்டாட்டமாக இருக்கும். முன்பு கிராமங்களில் ஓலைப்பட்டாசுகள், மத்தாப்புகள் ஆகியவையே தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடையாளங்களாக இருந்தன. அவை அதிக செலவில்லாதவையாகவும் பாதுகாப்பானவையாகவும் இருந்தன. ஆனால், தற்போது ஆடம்பரத்திற்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், உடலிலும் கைகளிலும் காயங்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை அனைவரும் கைவிட வேண்டும். அதேபோல், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தீபாவளி என்றாலே டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மதுபானங்களை வாங்கி வைத்து, தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் மது அருந்திவிட்டு சுயநினைவின்றிக் கிடப்பதை மகிழ்ச்சியாகவோ பெருமையாகவோ நினைக்கக் கூடாது. ஏற்கெனவே சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதுடன், புவி வெப்பமயமாதலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மழை பெய்ய வேண்டிய காலங்களில் மழை பெய்யாமலும், தேவையற்ற நேரங்களில் அதிக மழைப்பொழிவும் ஏற்படுகிறது. எனவே, இந்தத் தீபாவளியில் பட்டாசு பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். மதுவை முற்றிலும் தவிர்த்து உடல்நலத்தைப் பேண வேண்டும். இதுவே அனைவருக்கும் நான் தெரிவிக்கும் தீபாவளி வாழ்த்தும், நற்செய்தியுமாகும். இவ்வாறு கிருஷ்ணசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.