திருவண்ணாமலை: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணக்கிளிகொட்டம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அண்ணக்கிளிகொட்டம் சாலையில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் கடையைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களிடம் மதுபோதையில் இருப்பவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாகவும், இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக, வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மதுக்கடையை அகற்ற வேண்டும் என மாவட்டஆட்சியரிடம்மனுஅளித்துள்ளனர்.இதுதொடர்பாக மூன்று முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இன்று பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், கடையின் முன்பாக தீக்குளித்து உயிரிழப்போம் என பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.