திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரும் 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் மற்றும் இதர உணவுப் பொருட்களை வழங்கத் திட்டமிடுபவர்கள், www.foscos.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அனுமதிச் சான்றிதழைப் பெற்று, மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடங்களில் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். மேலும், திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில், வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அன்னதானப் பணியில் ஈடுபட உள்ளவர்களின் விவரங்களையும், அவர்களது ஆதார் அட்டை நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அன்னதானம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
Advertisement
உரிய அனுமதியின்றி உணவு வழங்கக் கூடாது. கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறத்தில் அன்னதானம் வழங்க வேண்டும். தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களை உணவு தயாரிக்கும் பணியிலோ, உணவு விநியோகிக்கும் பணியிலோ ஈடுபடுத்தக் கூடாது. உணவு மற்றும் பிற பொருட்களை வாழை இலை, பாக்கு மட்டை அல்லது தொன்னை ஆகியவற்றில் வழங்க வேண்டும். பொட்டலமிட்ட உணவுகளை அன்னதானமாக விநியோகிக்க அனுமதி இல்லை. வழங்கப்படும் உணவுகள் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், கலப்படமற்றதாகவும் இருக்க வேண்டும். உணவில் செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது. உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி உணவு வழங்கக் கூடாது. உணவுக் கழிவுகளைச் சேகரிப்பதற்காகக் குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு வழங்குபவர்களே கழிவுகளைச் சேகரித்து முறையாக அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்கி முடித்ததும் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். வாகனங்களில் உணவு வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார்களுக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.