திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையடுத்து காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதிகளில் வலம் வருகிறார். நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை யாகசாலையில் தீபாராதனை முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு செல்கிறார்.
Advertisement
மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக எழுந்தருளுகிறார். திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் திருநாளான நவம்பர் 16-ந்தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை: சிறப்பு ஏற்பாடுகள் கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்கு வரத் தொடங்கினர். அவர்கள் தங்குவதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவின் முதல் 5 நாட்களில் சுமார் 1 லட்சம் பக்தர்களும், சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் 6 லட்சம் பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவிலில் தினமும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரிசன வரிசையில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6 லட்சம் குடிநீர் பாட்டில்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் 300 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரையிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிக்காக திருச்செந்தூரில் 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டு, கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கந்தசஷ்டி விழா நிகழ்ச்சிகளை பக்தர்கள் காணும் வகையில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் நாட்களில் மொத்தம் 5,000 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.