தினத்துளிர் பெற்ற முதல் விருது
மதுரையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா
50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்; ஏழை மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கல்**
மதுரை, செப். 27:மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள யூ.சி. பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பிரஸ் யூனியன் முன்னெடுப்பில், அகில இந்திய மக்கள் கழகம் (AIPWA) மற்றும் சிங்கமுகி பிரத்யங்கிரா யாகசாலை இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாடுகளையும் நிலவன் டிவி சார்பில் சின்னத்தம்பி மேற்கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்தார்.
விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்
நிகழ்ச்சியின் தொடக்கமாக மதுரை ஆதி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 80 பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள்
நிகழ்ச்சியில் இடைக்காட்டூர் பிரபாகரன், தலைமை ஆசிரியர், சந்தானம் லாட்ஜ் உரிமையாளர், மதுரை ஆதி மருத்துவமனை மருத்துவர் திருமலை கண்ணன், சிங்கமுகி பிரத்யங்கிரா யாகசாலை மருத்துவர் ஷர்மிளா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தினத்துளிர் இணையதளத்திற்கு பாராட்டு
நிகழ்ச்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே இணையத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் **‘தினத்துளிர்’ இணையதளம் குறித்தும் பாராட்டிப் பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தினத்துளிர் நிறுவனர் கண்ணன், சமூக வலைதளங்கள், தினசரி செய்தித்தாள் உள்ளிட்ட அனைத்து ஊடக வடிவங்களிலும் தினத்துளிர் விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இன்றைய டிஜிட்டல் உலகிலும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இடைக்காட்டூர் பிரபாகரன், இணைய உலகம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் தினசரி நாளிதழ் வெளிவர வேண்டும் என்ற நோக்கத்துடன் தினத்துளிர் செயல்பட்டு வருவதைப் பாராட்டினார்.
தினத்துளிரின் இந்த முயற்சியைப் பாராட்டி, **AIPWA மற்றும் சிங்கமுகி பிரத்யங்கிரா யாகசாலை சார்பாக தினத்துளிர் நாளிதழ் மற்றும் செய்திதளத்திற்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தினத்துளிர் நிறுவனம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பெற்றுள்ள இந்த விருது, தினத்துளிர் நாளிதழ் சார்பில் பெறப்பட்ட முதல் விருது என்பதால், தினத்துளிர் குழுமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சமூக நலப்பணிகள், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு, மருத்துவ சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.