தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கான பல புதிய திட்டங்கள் அறிவிப்பு – முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். 2026–27 நிதியாண்டுக்கான இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், தோட்டக்கலை, உயிர்ம வேளாண்மை, நீர் மேலாண்மை, இயந்திரமயமாக்கல், சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன.பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதேவேளை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.பட்ஜெட் உரையின்போது முதல்-அமைச்சரைப் பாராட்டி அமைச்சர் வினோத் சில பகுதிகளை வாசித்ததை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதையடுத்து, வேளாண் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை மட்டும் வாசிக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்று இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய முன்னோடி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வேளாண்மை வளர்ச்சியே அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் என்ற நோக்கில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். முக்கிய அறிவிப்புகள் * நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நஞ்சில்லா வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.5 கோடி. * கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி. * தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைக்க ரூ.5 கோடி. * கியூஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி. * உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.20 கோடி. * திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் புதிய வேளாண் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்களுக்கு ரூ.4.6 கோடி. * இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.4.80 கோடி. * கடலோர மாவட்டங்களில் நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய், கொத்தமல்லி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம். * 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்க 60 சதவீதம் வரை மானியத்துடன் ரூ.6 கோடி. * இ-வாடகை 2.0 செயலி மூலம் இயந்திர வாடகை சேவையை வலுப்படுத்த 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கப்படும். * வேளாண் இயந்திர பராமரிப்பு மையங்கள் அமைக்க 50 சதவீத மானியத்துடன் ரூ.1.12 கோடி. * 500 புதிய பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் உருவாக்கவும், மேலும் 500 குட்டைகளை 75 சதவீத மானியத்தில் தூர்வாரவும் ரூ.8.5 கோடி.