அரசுப் பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கும் வகையில், கடந்த 13.06.2026 முதல் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பாடவாரியான பயிற்சிகள், பயிற்சித் தாள்கள், மாதிரித் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வகுப்புகளில் வழங்கப்படும் பயிற்சித் தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்வதுடன், அவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கும் தங்கள் பள்ளிகளிலேயே தீர்வு காணும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வெற்றிப் பள்ளிகள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை தினமும் மாலை நேர சிறப்பு வகுப்புகளின்போது பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயிற்சித் தாள்களில் உள்ள வினாக்களுக்குப் பதிலளிப்பது, எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவது, முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மணற்கேணி செயலி உள்ளிட்ட இணையவழி கற்றல் வளங்களையும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான மாணவர்களின் தயாரிப்பை மேம்படுத்துவதுடன், உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும். மேலும், வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் இலக்குகளை முழுமையாக எட்டவும் உதவும் என பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் முறையாகச் செயல்படுத்துவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.