தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? இன்று மத்திய அரசின் முக்கிய முடிவு எதிர்பார்ப்பு
நீட் வினாத்தாள் விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அப்போது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.இதையடுத்து, நேற்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் ஜே.பி. நட்டாவுடன் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் பங்கேற்றார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, போராட்டக்காரர்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அரசு கவனமாக கேட்டறிந்ததாக தெரிவித்தார். தேர்வு முறையில் சீர்திருத்தம் தொடர்பாக அவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளையும், ஐந்து ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளதாக கூறிய அவர், அவற்றை அரசு உள்மட்டத்தில் ஆலோசித்து இன்று பிற்பகல் மீண்டும் சந்தித்து பதில் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.இதுகுறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் தொடர்பான கோரிக்கைக்கு பதிலளிக்க இன்று மதியம் வரை அரசு அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.