மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறும் இவ்விழா, நவம்பர் 16-ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விரதம் கடைப்பிடிக்க உள்ளதால், கோவில் நிர்வாகம் விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கோவில் வளாகத்திலேயே தங்கி ஒரு வாரம் விரதம் இருக்கும் பக்தர்களுக்காக மண்டபங்களில் போதிய தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரதம் இருப்பவர்களுக்கு பால், தினைமாவு, பழங்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும், தினமும் அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
பக்தர்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தடையற்ற குடிநீர் விநியோகம், மின்விசிறிகள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. விழா நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும் நேரலை தரிசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 3 இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்களுக்காகத் தனியாகச் சிறப்புப் பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 16-ம் தேதி (திங்கட்கிழமை) திருத்தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதுடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.