சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்ததற்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். ஜாபர் சாதிக் என்பவரின் வருகைக்குப் பிறகுதான் மாநிலத்தில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் இத்தகைய விவகாரங்கள் முறையாகக் கையாளப்பட்டிருக்காது என்றும் விமர்சித்தார். அப்போது மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக்கூட கோலப்பொடி எனக் கூறி பிரச்சினையை முடித்திருப்பார்கள் என்றும், ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டபோது அதை உரம் எனக் கூறி மறைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலவீனமடைந்துள்ளது அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Advertisement
அக்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும், அதிமுகவின் சொத்துகளை திமுகவிடம் அடமானம் வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார். முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு செங்கல்கூட ஏற்றுக்கொள்ளாது எனக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்தார். பெரியார் அறிவுலகம் அரசு நிதியில் கட்டப்பட்டது கோவையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம் குறித்துப் பேசிய அவர், அந்தத் திட்டம் அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார். இது திமுகவினரின் தனிப்பட்ட திட்டம் அல்ல என்றும், அதன் உருவாக்கத்தில் ஸ்டாலினுக்கு எந்தத் தனிப்பட்ட யோசனையும் இல்லை என்றும் விமர்சித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார், ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவிலேயே இருந்ததாகக் கூறினார். கடந்த கால ஆட்சியில் உருப்படியான திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், அவர் தனது சொந்தத் தொகுதியிலேயே ஏன் தோல்வியடைந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.