தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரிவரத் தெரியாத சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். குறிப்பாக, அதிகாலை வேளையில் சாலைகள் முழுவதும் பனியால்மூடப்பட்டதுபோல் காணப்பட்டன. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணம் செய்தவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்கினர். மேலும், எதிரே வரும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி மற்றும் எச்சரிக்கைப் பலகைகளும் தெளிவாகத் தெரியவில்லை.
Advertisement
இதனால் விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பனிமூட்டத்தால் அதிகாலை நேரத்தில் போக்குவரத்தின் வேகமும் குறைந்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பனிமூட்டம் படிப்படியாக விலகியதைத் தொடர்ந்து சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. எனவே, பனிமூட்டம் நிலவும் நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி போதிய இடைவெளியுடன் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.