தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுந்து விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்ட அளவைத் தாண்டி பருப்பு வகைகளை இருப்பு வைக்க முடியாது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவுகளை அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் சில்லறை பணவீக்கம் 6.81 சதவீதமாக பதிவானது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக சில்லறை பணவீக்கம் கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்தது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10.62 சதவீதத்தை எட்டியது. இதில் பருப்பு வகைகளின் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.134.23-க்கு விற்பனையானது. ஆனால், அப்போது நாட்டின் சராசரி விலை ரூ.124.41 மட்டுமே. அதாவது, தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தில் கிலோவுக்கு ரூ.9.82 அதிகமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் துவரம் பருப்பு கிலோ ரூ.143-க்கும், உளுந்து ரூ.128-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் சில்லறை சந்தையில் துவரம் பருப்பு கிலோ ரூ.153.43 ஆகவும், உளுந்து ரூ.139.67 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்புக்கு வரம்பு விதிக்க கோரிக்கை பருப்பு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை வாங்கி சேமித்து வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக துவரம் பருப்பு, உளுந்து, அரிசி, சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றின் இருப்புக்கு வரம்பு நிர்ணயிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, தற்போது துவரம் பருப்பு மற்றும் உளுந்துக்கு மட்டும் இருப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.மொத்த, சில்லறை விற்பனையாளர்களுக்கு கட்டுப்பாடு புதிய விதிகளின்படி, மொத்த விற்பனையாளர்கள் துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றில் ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சமாக 200 டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்கலாம்.