தஞ்சாவூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்காலில் புதிய தடுப்பணை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், விவசாயிகளே ஒன்றிணைந்து தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வல்லம்புதூரில் உருவாகும் வல்லம்வாரி, தஞ்சாவூர் வழியாக சுமார் 30 கிலோமீட்டர் பயணித்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கண்ணனாற்றில் கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த வாய்க்கால் வடிகால் பாதையாகவும் பயன்படுகிறது. நெய்வாசல் கிராமத்தில் வல்லம்வாரியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பணை மூலம், குலமங்கலம் பகுதியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட சடையன் ஏரி மற்றும் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெய்வாசல் ஏரிக்கு தண்ணீர் சென்று வந்தது.
Advertisement
இந்த இரு ஏரிகளின் மூலம் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக வல்லம்வாரி தடுப்பணை முழுமையாக சேதமடைந்த நிலையில் இருப்பதால், ஏரிகளுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பணை அமைக்கக் கோரி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் நிதி திரட்டி, சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.