தசரா விடுமுறையின்போது கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியைத் தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுற்றுலா தலங்களின் நுழைவாயில்களில் ஏற்படும் காலதாமதத்தையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், https://kodaikanalwildlifesanctuary.com/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று முன்கூட்டியே நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணம் செலுத்தியதற்கான டிஜிட்டல் ரசீது அல்லது அச்சிடப்பட்ட ரசீதை நுழைவாயில்களில் காண்பித்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான மலைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு, விடுமுறை காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இதனால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் வழிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக, நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. ஆரம்பத்தில் ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், ஒரே முறையில் நேரடியாக டிக்கெட் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
Advertisement
எனினும், இதுவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் போதிய பலனை அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மலைப்பகுதிகளில் செல்போன் சிக்னல் சீராகக் கிடைக்காததால், பணம் செலுத்துவதிலும் டிக்கெட் பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியாக, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கியூஆர் குறியீடு வாயிலாகக் கட்டணம் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, முன்கூட்டியே ஆன்லைனில் நுழைவுச் சீட்டு பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே, தசரா விடுமுறையில் கொடைக்கானலுக்குச் செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள், நுழைவாயில்களில் காத்திருப்பதைத் தவிர்த்து, சிரமமின்றி சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.