Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 21 ஆகஸ்ட் 2026 | 5 ஆவணி பராபவ வருடம்

தொகுதி மறுவரையறை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்

தொகுதி மறுவரையறை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுவரையறை தொடர்பாக சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. தி.மு.க., த.வெ.க., அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாடுகளை முன்வைத்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர், சில ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை தவறான கோணத்தில் செய்தியாக வெளியிடுவதாகக் கூறினார். 543 எம்.பி.க்கள் என்ற தற்போதைய எண்ணிக்கையே தொடர வேண்டும் என்பதில் முதல்-அமைச்சரும் அரசும் உறுதியாக இருப்பதாகவும், ‘Fair Delimitation’ தேவையில்லை; தொகுதி மறுவரையறையை முடக்கி வைக்கும் ‘Freeze Delimitation’ முறையே தேவை என்றும் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கையில், தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசியது குறித்து அமைச்சர் குறிப்பிட்டதாகக் கூறினார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 543 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கை தொடர வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் அவ்வாறு பேசவில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது எனக் கூறி நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா கொண்டு வரப்படும் போது தி.மு.க. வெளிநடப்பு செய்யாமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், வாஜ்பாய் கொண்டு வந்ததைப் போன்ற சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.தமிழ்நாடு தொடர்ந்து முன்வைக்கும் நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றும், அதே நேரத்தில் தமிழ்நாடு எந்தக் கோரிக்கையும் வைக்காத நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அதில் அரசியல் நோக்கம் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை என்பது சட்டரீதியான நடைமுறை என்றும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா அல்லது குறைய வேண்டுமா என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
Advertisement
அதுபோன்ற சட்டத்தை மீண்டும் கொண்டுவர அ.தி.மு.க. எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் தெரிவித்தார்.இதனிடையே, தி.மு.க.வின் நிலைப்பாடு மாறிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பதிலளித்தார். 7.18 சதவீதத்துக்கு குறையாத வகையில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக த.வெ.க. தெரிவித்திருந்ததாகவும், முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் பங்கேற்றதாகவும் கூறினார். மேலும், தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் த.வெ.க.வும் கையெழுத்திட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது த.வெ.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை ‘Fair Delimitation’ என்று கூறிவிட்டு தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதாக விமர்சித்தார்.பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன் பேசுகையில், தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டுக்கு சாதகமானதாக இருக்கும் என்றார். 50 சதவீத உயர்வு ஏற்பட்டால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் என்றும், தற்போது உள்ள 39 இடங்களில் இருந்து 59 ஆக உயர்த்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுவரையறை குறித்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டினார். பா.ம.க.வினர் ராமதாசை பாதுகாப்பதைவிட பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.இவ்வாறு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு