இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெலிவரி பாய்'. இப்படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், துஷ்யந்த், காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தனது தாயைக் காப்பாற்றப் போராடும் ஒரு இளம் டெலிவரி ஊழியரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. சென்னை மற்றும் கோவையில் படப்பிடிப்பு நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. மொத்தம் 42 நாட்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
Advertisement
பிரசன்ன குமார் ஒளிப்பதிவுப் பணியையும், வசந்த் படத்தொகுப்புப் பணியையும் மேற்கொண்டுள்ளனர். முதலில் இப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் லியோ சிவகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகளுடன் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். அதன்படி, 'டெலிவரி பாய்' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், 'பாட்டில் கேங்' என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு பாடகி தீயே வரிகளை எழுதி பாடியுள்ளார். வெளியான இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.