ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பவை மார்வெல் மற்றும் டி.சி. இந்த இரு நிறுவனங்களும் கடந்த நூற்றாண்டில் காமிக்ஸ் புத்தகங்கள் வாயிலாக ஏராளமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தன. புதிய சூப்பர் ஹீரோக்களையும், வித்தியாசமான கதைகளையும் உருவாக்குவதில் இரு நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகாலமாக போட்டி நிலவி வருகிறது. காமிக்ஸ் உலகில் டி.சி. கதைகளுக்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரை அந்த நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. மறுபுறம், மார்வெல் நிறுவனம் திட்டமிட்ட முறையில் 'மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்' (MCU) என்ற திரைப்பட பிரபஞ்சத்தை உருவாக்கி, அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு பெரும் வெற்றியைப் பெற்றது. டி.சி. சார்பில் வெளியான 'பேட்மேன்', 'மேன் ஆப் ஸ்டீல்', 'வொண்டர் உமன்' உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றபோதிலும், வசூலில் மார்வெலுடன் சமமாகப் போட்டியிட முடியாமல் தடுமாறின. இதையடுத்து, மார்வெலின் MCU பாணியைப் பின்பற்றி, டி.சி. நிறுவனமும் 'டி.சி. எக்ஸ்டெண்டட் யுனிவர்ஸ்' (DCEU) என்ற பெயரில் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கியது. இந்தத் திட்டத்தை இயக்குநர் ஜேக் ஸ்னைடர் முன்னெடுத்து வந்தார். ஆனால், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் தொடர்பாக நிறுவன நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு, டி.சி. ஸ்டூடியோஸின் தலைமைப் பொறுப்பை இயக்குநர் ஜேம்ஸ் கன் ஏற்றார். ஏற்கனவே மார்வெல் நிறுவனத்தின் 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட அவர், டி.சி. திரைப்படங்களுக்கு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பினர். குறிப்பாக, டி.சி. படங்களில் நகைச்சுவைக்கும் இடமளித்து, கதைகளின் பாணியில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதன் தொடர்ச்சியாக, டி.சி.
Advertisement
திரைப்படங்களைப் புதிய வரிசையில் உருவாக்கப்போவதாக ஜேம்ஸ் கன் அறிவித்தார். இந்தப் புதிய திட்டத்தின் முதல் படமாக 'சூப்பர்மேன்' திரைப்படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரத்தில், படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் மார்வெல் திரைப்படங்களை நினைவுபடுத்துவதாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், 'சூப்பர்மேன்' படத்துக்குப் பிறகு வெளியான 'சூப்பர் கேர்ள்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களைக் கவரவில்லை. அண்மையில் வெளியான 'கிளேபேஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றபோதும், 'சூப்பர்மேன்' படத்தைப் போன்ற பெரிய வெற்றியைப் பெறவில்லை. இத்தகைய சூழலில், டி.சி. ஸ்டூடியோஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜேம்ஸ் கன் அறிவித்துள்ளார். அவருடன் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த பீட்டர் சப்ரானும் தனது பதவியிலிருந்து விலகுகிறார். டி.சி. திரைப்படங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இருவரின் விலகல் அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகலுக்குப் பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் கன், இதுகுறித்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்தக் காரணம் மட்டும்தானா அல்லது நிறுவனத்தின் உயர் நிர்வாகத்துடன் வேறு ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளனவா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதற்கிடையே, டி.சி. ஸ்டூடியோஸின் அடுத்த தலைமைப் பொறுப்பை ஜெரேமி லேட்சம் ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே மார்வெல் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். அவரது தலைமையில் டி.சி. திரைப்படங்களின் கதை சொல்லும் முறையிலும், தயாரிப்பு அணுகுமுறையிலும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.