டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் அதிகாரிகளின் இடங்கள், மதுபான ஆலைகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதுதொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலமும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் என குறிப்பிடப்படும் ரத்தீஷ்ராஜ், சண்முகவேல், கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.