ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கும் முதல்-அமைச்சர் விஜய்
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், ஷமீனா ரியாஸ் மற்றும் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தடகள வீரர் ரமேஷ் ராஜேஷ் ஆகியோருக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களே உண்மையான ஹீரோக்கள் என்று குறிப்பிட்டார். அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் சாதிப்பதை வீரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், விளையாட்டுத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும், விளையாட்டு வீரர்களுக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் விருந்து அளித்து கவுரவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான தேதியை முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அந்த நிகழ்ச்சியில் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.