சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் ஓட்டுநர்கள் பாபு, பார்த்திபன், லாசர் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது இதுவரை மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 7 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. மற்றொரு வழக்கு, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்கிற்கும் தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் தனித்தனியாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
இதன் தொடர்ச்சியாக, காவல்துறையைச் சேர்ந்த மூன்று பெண் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா மற்றும் துணை ஆணையர் ராஜலட்சுமி ஆகியோரை இந்தப் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் ஆணையர் ராதிகா உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 7 அதிகாரிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்ததாகத் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையிலும் இவர்களது பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.