‘ஜெம் கிரானைட்’ தொழில் அதிபர் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகப் புகார் எழுந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு இவர்கள் தங்களது வீட்டை பயன்படுத்த அனுமதித்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதே வழக்கில் வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது செல்போனில் இருந்து வீரமணி தொடர்பான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வீரமணியுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகிய இருவரும் ஜாமின் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 2019-ம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சுமார் 6 ஆண்டுகள் கழித்து, 2025 அக்டோபர் 7-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு உரிய விளக்கம் அளிக்கப்படாததால், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகம் எழுவதாகவும் வாதிடப்பட்டது.
Advertisement
மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டு 3 வாரங்களை நெருங்கிய நிலையிலும் தங்களை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில், வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடுவர் முன்னிலையில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சட்டப்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போலீசார் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.