ஜப்பானின் பிரபல ஓவியர் யாயோய் குசாமா காலமானார்
ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியரும் கலைஞருமான யாயோய் குசாமா தனது 97-வது வயதில் காலமானார்.1929-ஆம் ஆண்டு ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் பிறந்த குசாமா, சிறு வயது முதலே ஓவியக் கலையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கலைப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்ற அவர், தனித்துவமான புள்ளி வடிவ ஓவியங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இதன் தொடர்ச்சியாக, ‘இன்பினிட்டி நெட்ஸ்’ என்ற ஓவியத் தொடரை உருவாக்கி விரைவில் புகழடைந்தார்.1960-களில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நியூயார்க் கலை உலகில், தனது வித்தியாசமான படைப்புகளால் குசாமா தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். அவரது கலை முயற்சிகள் அங்குள்ள கலைத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின. 1965-ஆம் ஆண்டு நியூயார்க்கில் அவர் தனது முதல் ‘இன்பினிட்டி மிரர் ரூம்’ படைப்பை உருவாக்கினார்.சிறிய அறைக்குள் இருக்கும் பார்வையாளர்களுக்கு, தாங்கள் பல கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான விண்வெளியில் இருப்பது போன்ற அனுபவத்தை இந்தக் கலைப்படைப்பு வழங்கியது.
பின்னர், இதுபோன்ற படைப்புகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தன.பல ஆண்டுகளாக கலை உலகில் புறக்கணிப்பை எதிர்கொண்ட குசாமா, தனது 80 மற்றும் 90 வயதுகளிலும் தொடர்ந்து புகழின் உச்சத்தை எட்டினார். இதன் மூலம் உலகின் முன்னணி கலைஞர்களில் ஒருவராக அவர் உயர்ந்தார். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், அவர் உருவாக்கிய ஓவியம் ஒன்று சுமார் 10.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.100.28 கோடியாகும்.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த குசாமா, மனநல சிகிச்சைக்காக டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது இறுதிச் சடங்குகளை அமைதியான முறையில் நடத்த குடும்பத்தினர் விரும்பியதால், அவரது மறைவு குறித்த தகவல் 13 நாட்களுக்குப் பிறகு, இன்று கலை நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.யாயோய் குசாமாவின் மறைவு உலக கலைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.