ஜனவரி 10-ம் தேதி குரூப்- 4 தேர்வு: 6,574 காலிப்பணியிடங்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குரூப்-1, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இதன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
2026-ம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில் எந்தெந்த பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்பது தொடர்பான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதன்படி, குரூப்-1, குரூப்-2ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளதுடன், சில தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என ஆண்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. இன்று (10.06.2026) வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்காக மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த ஆண்டு குரூப்-4 பதவிகளுக்கு 5,307 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது.
அந்தத் தேர்வை எழுத 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.