தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா - ஜோதிகா, தங்களது 20-வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர். இந்த நிகழ்வை முன்னிட்டு, தங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா - ஜோதிகா முதன்முறையாக ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து ‘பேரழகன்’, ‘காக்க காக்க’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களிலும் ஜோடியாக நடித்தனர். 2006-ம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அந்தப் படம் வெளியான 3-வது நாளான செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர்களின் 20-வது திருமண நாள் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மகன் மற்றும் மகள் முன்னிலையில் இருவரும் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர் கார்த்தி உள்ளிட்ட அவர்களின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
இந்த திருமண நிகழ்வின் வீடியோவை சூர்யா - ஜோதிகா தம்பதி ‘தி சீக்குவல்’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், திருமண நிகழ்வின் காட்சிகளுடன் சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கை குறித்து பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், சூர்யா வெளியிட்ட பதிவில், பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகள் மற்றும் ஏரிகளைக் கொண்ட ஸ்காட்லாந்து, தங்களது காதலை பிரதிபலிக்கும் இடமாக இருந்ததால் அதனைத் தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அங்கிருந்து திரும்பும்போது நினைவுகளைவிட மேலான ஒன்றை தாங்கள் எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரந்த மனதுடனும் உண்மையான அன்புடனும் தங்களை வரவேற்ற பலரை சந்தித்ததால், தங்களது இதயங்கள் ஸ்காட்லாந்தை எப்போதும் விட்டு விலகாது என்றும், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.