இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஆனால், தற்போது பிரதான சாலைகளில் மட்டுமின்றி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வர்த்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், குடியிருப்பில் இருந்து வெளியேறி பிரதான சாலையை அடையவே வாகன ஓட்டிகள் சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அங்கு வசிக்கும் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கான கார்கள் நீண்ட வரிசையில் நகர முடியாமல் நிற்பது பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இந்த மிகப்பெரிய குடியிருப்பில், வாகனங்கள் வெளியேற குறிப்பிட்ட சில நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களே உள்ளன.
Advertisement
வார இறுதி நாளில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேற முயன்றதால் வளாகத்திற்குள்ளும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வர்த்தூர்-ஒயிட்பீல்டு பிரதான சாலைகளில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பு வாயிலைக் கடந்த பிறகும் வாகனங்கள் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான சாலையில் ஏற்பட்ட நெரிசலின் தாக்கம் குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் வந்து, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட குடியிருப்பு திட்டங்கள் முறையான போக்குவரத்து திட்டமிடலுடன் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. இதுபோன்ற கட்டமைப்புகள் சரியான போக்குவரத்து திட்டமிடல் இல்லாமல் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் பெங்களூரு மக்களின் அன்றாட பயணங்களில் மேலும் சிரமங்கள் ஏற்படக்கூடும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்த பெங்களூருவில், தற்போது குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே கார்கள் வரிசையாக நிற்கும் காட்சியைப் பார்த்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.