சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவராக சத்யபாமா அவையை நடத்தினார்
தமிழக சட்டசபையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் இன்று முதல்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சட்டசபை நிகழ்வுகளை சிறப்பாக வழிநடத்தினார். தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக சபாநாயகர் அவையை நடத்துவார். அவர் இல்லாதபோது துணை சபாநாயகர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இருவரும் ஒரே நேரத்தில் அவையில் இல்லாத சூழலில், சட்டசபை நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதற்காக மாற்று பேரவை தலைவர்கள் குழு அமைக்கப்படும்.அதன்படி, தற்போதைய சட்டசபைக்கான மாற்று பேரவை தலைவர்கள் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதில் தவெகவைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமாவும் இடம்பெற்றிருந்தார்.இந்த நிலையில், இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது சபாநாயகரும், துணை சபாநாயகரும் தற்காலிகமாக அவையில் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாற்று பேரவை தலைவரான சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார்.அவர் விவாதங்களை நடுநிலையுடன் கவனித்து, சட்டசபை நடவடிக்கைகளை தொடர்ந்து வழிநடத்தினார். தவெகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றது.சத்யபாமா அவையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஒருவர் அவரை தவறுதலாக "துணை பேரவை தலைவர்" என்று குறிப்பிட்டார்.