சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவராக சத்யபாமா அவையை நடத்தினார்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவராக சத்யபாமா அவையை நடத்தினார்

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்: மாற்றுத்தலைவராக சத்யபாமா அவையை நடத்தினார்

தமிழக சட்டசபையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் இன்று முதல்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சட்டசபை நிகழ்வுகளை சிறப்பாக வழிநடத்தினார். தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக சபாநாயகர் அவையை நடத்துவார். அவர் இல்லாதபோது துணை சபாநாயகர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இருவரும் ஒரே நேரத்தில் அவையில் இல்லாத சூழலில், சட்டசபை நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதற்காக மாற்று பேரவை தலைவர்கள் குழு அமைக்கப்படும்.அதன்படி, தற்போதைய சட்டசபைக்கான மாற்று பேரவை தலைவர்கள் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதில் தவெகவைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமாவும் இடம்பெற்றிருந்தார்.இந்த நிலையில், இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது சபாநாயகரும், துணை சபாநாயகரும் தற்காலிகமாக அவையில் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாற்று பேரவை தலைவரான சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார்.அவர் விவாதங்களை நடுநிலையுடன் கவனித்து, சட்டசபை நடவடிக்கைகளை தொடர்ந்து வழிநடத்தினார். தவெகவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றது.சத்யபாமா அவையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஒருவர் அவரை தவறுதலாக "துணை பேரவை தலைவர்" என்று குறிப்பிட்டார். உடனடியாக அவையில் இருந்த உறுப்பினர்கள், அவர் துணை பேரவை தலைவர் அல்ல; மாற்று பேரவை தலைவர் என சுட்டிக்காட்டினர். இதனால் சிறிது நேரம் அவையில் கலகலப்பான சூழல் நிலவியது.சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பொறுமையுடனும் கம்பீரத்துடனும் சத்யபாமா அவையை நடத்தியதை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பாராட்டினர்.திமுகவைச் சேர்ந்த தங்கம் தென்னரசு பேசுகையில், லேடி வெல்லிங்டன் சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண் பேரவை தலைவராக அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது மாற்று தலைவராக சத்யபாமா அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்மாற்று பேரவை தலைவர்கள் குழுவில் சத்யபாமாவுடன் தவெகவைச் சேர்ந்த விஜய் சரவணன், மதார் பதுருதீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் ஆகியோரும் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.