இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படத்தைப் பாராட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தளப் பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் ‘ஆவேசம்’, ‘ரோமன்சம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், ‘சீன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்து வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினரைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். அதில், திரைப்படம் மிகவும் ஸ்டைலாகவும், சுவாரஸ்யமாகவும், புத்திசாலித்தனமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
மேலும், இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும், நஸ்ரியா மற்றும் நஸ்லென் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகவும் பாராட்டியிருந்தார். இயக்குநர் ஜித்து மாதவனின் எழுத்து மற்றும் திரைக்கதை அமைப்பையும் வெகுவாகப் புகழ்ந்த அவர், அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் தெரிவித்திருந்தார். மகேஷ் பாபுவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், மகேஷ் பாபுவின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி கூறியதுடன், தங்களது திரைப்படத்தைப் பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கி, தனது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியிருப்பது அவரது பெருந்தன்மையை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது சார்பாகவும், ஒட்டுமொத்த ‘சீன்’ படக்குழுவினர் சார்பாகவும் மகேஷ் பாபுவின் இந்த அன்பான செயலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக சூர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.