சத்தீஸ்கர் மாநிலத்தில் சமூக விரோதிகளால் பட்டைகள் அகற்றப்பட்டு, உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை மீட்டெடுக்க வனத்துறையினர் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். சத்தீஸ்கரின் தம்தரி மற்றும் காரியாபந்த் மாவட்டங்களில் அமைந்துள்ள உதந்தி சீதானதி புலிகள் காப்பகத்தின் கர்கா கிராமப் பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்த வனப்பகுதிகளை வனத்துறையினர் அண்மையில் மீட்டனர். அப்போது, அங்கிருந்த ஏராளமான பழமையான மரங்களின் பட்டைகள் திட்டமிட்டு அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் மரங்கள் காய்ந்து, உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மரங்களை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், வனத்துறை இன்று வியாழக்கிழமை சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்காக, பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், ‘மரங்களின் மருத்துவர்’ என அழைக்கப்படுபவருமான விஜய் நிஷாந்தின் தொழில்நுட்ப உதவி பெறப்படுகிறது.
Advertisement
இந்தச் சிகிச்சையில், மரங்களின் சேதமடைந்த பகுதிகளில் பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும் மருந்துகளும் இயற்கை ஊட்டச்சத்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சேதமடைந்த இடங்களில் ஆரோக்கியமான கிளைகளிலிருந்து பெறப்பட்ட பட்டைகள் பொருத்தப்பட்டு, அவை பிளாஸ்டிக் தாள்களால் மூடிப் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் மீண்டும் வளர உதவுவதுடன், மரங்களில் நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் கடத்தப்படும் செயல்பாடுகளையும் சீராக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காடுகளின் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் புதுமையான முயற்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.