சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கீழ் செயல்படும் சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. மலைப்பாதை வழியாக சுமார் 10 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டே இக்கோயில்களை அடைய முடியும். பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய விசேஷ நாட்களில் மட்டுமே இக்கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
Advertisement
இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். தற்போது ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மீண்டும் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 6-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.