நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ‘சண்டியர்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், தலைப்பை மாற்றாவிட்டால் படப்பிடிப்பைத் தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சு. அருண்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. ஆனால், இப்படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு புதிய தமிழகம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 2003-ம் ஆண்டிலும் இதே பெயரில் கமல்ஹாசன் ஒரு படத்தை அறிவித்தபோது தென் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாகக் குறிப்பிட்டார். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நிலையில், எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சமூகத்தில் சாதி அடிப்படையிலான பதற்றத்தையும் மோதல்களையும் உருவாக்கக்கூடும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Advertisement
மேலும், சாதி வேறுபாடுகளைக் கடந்து செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒருவர், சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையிலான பெயரைத் தேர்வு செய்வது பொருத்தமற்றது என்றும் அவர் விமர்சித்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்க இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையே, சென்னையில் அமைச்சர் ராஜ்மோகனை நேரில் சந்தித்த கிருஷ்ணசாமி, ‘சண்டியர்’ படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்தார். அதில், இந்தப் பெயர் தென் தமிழகத்தில் தேவையற்ற சமூகப் பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டக்கூடும் என்பதால், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் அல்லது அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது கமல்ஹாசனுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, அதற்குள் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு மாற்றாமல் படப்பிடிப்பைத் தொடர்ந்தால், அது ஸ்டுடியோவுக்குள்ளாக இருந்தாலும் அல்லது வெளிப்புறப் பகுதிகளில் நடைபெற்றாலும், தலைப்பு மாற்றப்படும் வரை படப்பிடிப்பை நடத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்துள்ளார். ‘சண்டியர்’ என்ற சொல் தென் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும், ஆதிக்க சாதி மனப்பான்மையையும் சாதிப் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பெயர் அமைவதாகவும் கிருஷ்ணசாமி தனது எதிர்ப்புக்குக் காரணம் தெரிவித்துள்ளார். இதனால் சாதி ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.