கோடியக்கரையில் தொடங்கிய வெளிநாட்டுப் பறவைகள் வருகை சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு தாமதமாகத் தொடங்கியுள்ள பறவைகள் சீசன், தற்போது பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழையால் திரும்பிய பறவைகள் ‘பறவைகளின் நுழைவுவாயில்’ என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்குவது வழக்கம். இங்கு நிலவும் மிதமான தட்பவெப்பநிலையும், சதுப்புநிலங்களில் கிடைக்கும் உணவுகளும் பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த ஆண்டு கோடைக்காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. கோடியக்கரை சதுப்புநிலப் பகுதிகளிலும் வறட்சி நிலவியது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அப்பகுதியில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. பொதுவாக அக்டோபர் முதல் வாரத்திலேயே பறவைகளின் வருகை தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பம் காரணமாக சீசன் தாமதமாகத் தொடங்கியுள்ளது. 294-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்! ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து அரிய வகைப் பறவைகள் கோடியக்கரைக்கு வருகின்றன.