கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற சிறப்பு ரெயில்: என்ஜின் டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகிய 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் (06103), நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது. முழுவதும் பொதுப்பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட்டது. இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு மற்றொரு சிறப்பு ரெயில் (06104) இயக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில் காலை 6 மணிக்கு மதுரை வந்தடைந்தது.இந்த சிறப்பு ரெயில்கள் கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராமேசுவரம் செல்லும் பயணிகள் அந்தந்த நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்தனர்.ஆனால், மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற சிறப்பு ரெயில் கீழ்மதுரை நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து கீழ்மதுரை நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர், மதுரை ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அந்த ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியிருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் டிக்கெட்டுகள் திரும்பப் பெறப்பட்டு, கட்டணமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் ஆட்டோக்கள் மூலம் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலுக்கு கீழ்மதுரை மற்றும் திருப்புவனம் நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வரும் மறுமார்க்க ரெயிலுக்கு அந்த இரு நிலையங்களிலும் நிறுத்தம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.இந்த விவரத்தை முறையாக கவனிக்காமல் ரெயில் இயக்கப்பட்டதால், கீழ்மதுரை நிலையத்தில் சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.இதையடுத்து, மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகிய 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை தென்னக ரெயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.