தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களை தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையன்று சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பு மோதலாக மாறியது. இந்த மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த மாவீரன் (41), ரவி (39) ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும், குமார் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
Advertisement
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை நரிக்குறவர் காலனிக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த சிலரை தரையில் அமர வைத்த அவர், கையில் லத்தியை வைத்துக்கொண்டு விசாரித்ததுடன், அவர்களைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் லத்தியுடன் விசாரணை நடத்தும் இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவித்தனர். மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் நோக்கிலேயே இன்ஸ்பெக்டர் இருதரப்பினரிடமும் பேசியதாகவும் விளக்கமளித்தனர். மேலும், அங்கிருந்தவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அவர் செயல்பட்டதாகவும், யாரையும் மிரட்டவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.