காலாண்டு தேர்வு விடுமுறை: மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 2026-27ஆம் கல்வியாண்டு காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் மதிப்பெண்களை உரிய பதிவேடுகள் மற்றும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.