காரையாறு பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையாறு-மயிலாறு இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், காரையாறு அணையின் அடிவாரத்தில் உள்ள சின்ன மயிலாறு பகுதியில் காணி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு செல்ல, காரையாறு அணையின் அடிவாரத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளது.மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதால், சின்ன மயிலாறு பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக சில நேரங்களில் கயிறு உதவியுடனும், தற்காலிக தொங்கு பாலம் அமைத்தும் ஆற்றைக் கடந்து வந்தனர்.மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் ரூ.99 லட்சம் மதிப்பில் காரையாறு-மயிலாறு இடையே இரும்புப் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இதையடுத்து, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 18-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இந்த நிலையில், காரையாறு-மயிலாறு இடையே இரும்புப் பாலம் அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதனால் காணி பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். உரிய நேரத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.