கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த 15 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த கலையழகனின் மகன் ஜெகதீசன் (46), பள்ளியில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கச்சிராயப்பாளையம் போலீசார் ஆசிரியர் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு மேற்பார்வையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜெகதீசனை துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.