Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்” – மாணிக்கம் தாகூர் கருத்து

“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்” – மாணிக்கம் தாகூர் கருத்து

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு ஆதரவாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில், “தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்துள்ள எம்.எல்.ஏ., சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், தனது செல்போனைச் சோதிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்படியிருக்க, விசாரணைக்கு முன்பே அவரைக் குற்றவாளியாகச் சித்தரிப்பது நியாயமற்றது. வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் பரவியதற்காகவே ஒருவர் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. யார் புகார் அளித்துள்ளனர், யார் குற்றம்சாட்டியுள்ளனர் என்பதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர் தனது தரப்பு விளக்கத்தை அளித்த பிறகும் அவரைக் குற்றவாளியைப் போல சித்தரிப்பது ஊடக விசாரணைக்கு (Media Trial) ஒப்பானது. இதற்கிடையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் சுமார் 2,000 பேர் முன்னிலையில் ஒரு பெண் குறித்து பேசிய கருத்துகளை மீண்டும் கவனிக்க வேண்டும். அந்தப் பேச்சு மிகவும் இழிவானதும், அருவருக்கத்தக்கதுமாக இருந்தது. பெண்களை அதிகாரத் திமிருடன் இவ்வாறு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் இதேபோன்று பேசியதற்கோ, நடந்துகொண்டதற்கோ என்ன ஆதாரம் இருக்கிறது? இருந்தால் அதை வெளியிடுங்கள். பொதுவெளியில் ஒருவர் பேசிய உறுதியான கருத்தையும், மற்றொருவர் மீது கூறப்பட்டு இன்னும் நிரூபிக்கப்படாத புகாரையும் ஒப்பிடுவது சரியல்ல. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம். தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.

Advertisement
அவர் குற்றச்சாட்டை மறுக்கும் நிலையில், விசாரணைக்கு முன்பே தவறு செய்துவிட்டதாக முடிவெடுப்பது ஏன்? மாவட்ட கலெக்டர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அப்படியானால், அந்தப் புகார் எங்கு அளிக்கப்பட்டது, அதற்கான ஆவணம் உள்ளதா என்பன போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். மாவட்ட கலெக்டரும் தலைமைச் செயலாளரும் நிர்வாகப் பணிகள் தொடர்பாகத் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். அவர்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தை மட்டுமே வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அருள் விக்னேஷ் அளித்த விளக்கத்தை நான் பார்த்தேன். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யலாம். ஆனால், அதற்கு முன்பே அவர் குற்றம் செய்துவிட்டதாகத் தீர்மானிப்பது தவறு. நான் யாருக்கும் ஆதரவாகப் பேசவில்லை. வெவ்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கலந்து பார்க்காமல், ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுக வேண்டும். துணை சபாநாயகர் மீதான தாக்குதல் புகாரைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், துணை சபாநாயகர் மீதான புகாரும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரமும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றாகக் கலந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவருமே குற்றவாளிகள் என்று முன்கூட்டியே முடிவெடுப்பது முறையல்ல. அருள் விக்னேஷ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதை முறையாக ஆராய்ந்த பிறகே முடிவுக்கு வர வேண்டும்” என்றார். முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அருள் விக்னேஷுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு