நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால், அப்பகுதி முழுவதும் இயற்கை எழில் நிறைந்த கண்கவர் சூழல் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் பறவைகள் வருகைக் காலத்தில், ரஷ்யா, ஈரான், சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் கோடியக்கரை சரணாலயத்தை வந்தடைகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சீசனில் செங்கால் நாரை, கூழைக்கடா, பூநாரை, கடல் காகம், தாரா வாத்து, உள்ளான் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் தற்போது சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.
Advertisement
இப்பறவைகள் கூட்டம் கூட்டமாக வானில் பறந்து திரிவதைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் சரணாலயத்திற்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். வண்ணமயமான பறவைகளின் அழகிய அணிவகுப்பைக் கண்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.