சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய சி.எஸ்.கர்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் கர்நாதம் கிராமத்தில் 1955-ம் ஆண்டு பிறந்தவர் சி.எஸ்.கர்ணன். சென்னை சட்டக் கல்லூரியில் 1983-ம் ஆண்டு சட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். இதையடுத்து, 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
Advertisement
அங்கு பணியாற்றிய அவர், 2017-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது இயற்பெயர் கருணாநிதி. மனைவியின் விருப்பத்தின் பேரில் தனது பெயரை கர்ணன் என மாற்றிக்கொண்டார். நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த பல நீதிபதிகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, பதவியில் இருந்தபோதே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்த சி.எஸ்.கர்ணனின் மறைவுக்கு அக்கட்சியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.